கிண்ணியாவின் வரலாறு - எத்தனை வருடங்கள்?
-ஏ.ஸீ.எம்.முஸ்இல்-
கிண்ணியாவின் வரலாறு எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது என்பது தொடர்பான சரியான தகவல்கள் இது வரை எவராலும் ஆய்வு செய்யப்படாமை கவலைக்குரிய விடயமாகும். சிலர் 400 வருட வரலாறு என்று எழுதுகின்றார்கள். இன்னும் சிலர் 500 வருட வரலாறு என்று எழுதுகின்றார்கள். இன்னும் சிலர் எழுந்தமானமாக 450 வருட வரலாறு என்று கதைக்கின்றார்கள்.
இந்தத் தகவல்கள் பிழையானவை என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன.
கிண்ணியாவின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்ற ஒரு தகவல் உண்டு. எனினும், அதனை உறுதிப்படுத்தத் தேவையான ஆதாரம் தற்போது என்னிடம் இல்லாததால் அது பற்றி நான் இங்கு கருத்து தெரிவிக்க வில்லை.
எனினும், கிண்ணியாவின் வரலாறு 1300 வருடங்களுக்கு முற்பட்டது என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன.
கிண்ணியா மத்திய கல்லூரி வசந்தம் பொன் விழா சிறப்பு மலரில் கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
'8ஆம், 9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளில் திருகோணமலையை அண்மித்த சீனக்குடா, கிண்ணியா, உப்பாறு, மூதூர் போன்ற இடங்களில் கனிசமான முஸ்லிம் குடியிருப்புகள் காணப்பட்டதாக அரசரத்தினம் குறிப்பிடுகின்றார்.
இதேபோல மர்ஹூம் எஸ்.எம்.சரீப் சுமையா மகளிர் அறபுக் கல்லூரி 4 வது பட்டமளிப்பு விழா சிறப்பு மலரில் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'8ஆம், 9ஆம் நூற்றாண்டுகளில் இப்பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சில காணப்பட்டதாக அரசரத்தினம் போன்றோர் குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஊற்றடியில் (கிண்ணியா பாலத்துக்கருகில்) குடியேறிய பின்னர் பெரிய கிண்ணியா பெரிய பள்ளிவாயல் பகுதியில் குடியமர்ந்துள்ளனர்.
இவற்றை வைத்து நோக்கும் போது கிறிஸ்துவுக்குப் பின் 800க்கு முற்பட்ட ஆண்டுகளில் கிண்ணியாவில் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்ந்துள்ளனர். இந்த வகையில் கிண்ணியாவின் வரலாறு சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்டது என்பது தெளிவாகின்றது.
எனினும், கிண்ணியாவுக்கு 400 அல்லது 500 வருட வரலாறு என்று குறிப்பிடுவோர். யாஹூவர் வருகையிலிருந்து கிண்ணியாவின் வரலாற்றைக் கணிப்பிடுவதே இந்த ஆண்டுத் தவறுக்கு காரணம்.
ஏற்கனவே. பல நூற்றாண்டுகள் இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த காரணத்தினால் தான் முஸ்லிம் குடியிருப்புகளை நோக்கி யாஹூவர் இங்கு வந்திருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு.
0 Comments