Hot Posts

6/recent/ticker-posts

O' regan bridge

கிண்ணியா ஒரீகன் பாலம்


-ஏ.ஸீ.எம்.முஸ்இல்-

கடந்த 1949ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிண்ணியாவில் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்ட பாலம் ஆங்கிலேய சிவில் சேவை அதிகாரியான ஓ ரீகனின் பெயரில் இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. 

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவின் சின்னக்கிண்ணியா – பெரிய கிண்ணியா ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கும் வகையில் தம்பலகமக்குடாவிலிருந்து கிளையாக பிரிந்து வரும் கட்டையாற்றுக்கு மேலாக இந்தப் பாலம் (தற்போதைய பொதுநூலகத்திற்கு முன்னாலுள்ள பாலம்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  

கிண்ணியா பிரதான வீதி மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கமாகும். இதில் கட்டையாறு குறுக்கிடுகின்றது. ஆரம்பத்தில் வண்டியின் மூலமும், வள்ளங்களின் மூலமுமே மக்கள் இந்த ஆற்றைக்கடந்து வந்தனர். இதன் மூலம் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர்.

இதனைக் கவனத்தில் கொண்ட மூதூர்த் தொகுதியின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.எம்.அபூபக்கர் கட்டையாற்றுக்கு மேல் பாலம் நிர்மாணிக்கும் கோரிக்கையை அரசுக்கு முன் வைத்தார். இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு பாலமும் நிர்மாணிக்கப் பட்டது.

இப்பாலத்தின் திறப்பு விழா 1949 அக்டோபர் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அப்போதைய மீன்பிடி மற்றும் கைத்தொழில் அமைச்சர் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

1948 – 1949 காலப்பகுதியில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றிய ஆங்கிலேயரான ஜோன் ஹமில்டன் வில்லியம் ஓ ரீகன் உள்ளிட்டோரும் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தனர். 

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் அபூபக்கர் 'எமது கிராமத்தவர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தியவர் ஒ ரீகன்.  இப்பால நிர்மாணத்தில் அவரது பங்களிப்பு கனிசமானதாகும். எனவே, அவரது பொதுச்சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இப்பாலத்திற்கு அவரது பெயரை நான் சூட்டுகின்றேன்' என்று அறிவித்தார்.

அன்று முதல் இன்றுவரை இப்பாலம் ஆங்கிலேய சிவில் சேவை அதிகாரியின் பெயரில்  'ஒரிகன் பாலம்' என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.



உசாத்துணை:

1. 200th Year Anniversary of Civil Administration, Trincomalee District 1799- 1999

2. மர்ஹூம் ஏ.ஆர.ஏ.எம்.அபூபக்கர் பன்மைத்துவ அரசியல் ஆளுமை, மௌலவி எம்.ரீ.ஹபீபல்லாஹ்


Post a Comment

0 Comments